மானிப்பாய் படுகொலை -16 ஜனவரி 2006


Warning: Undefined variable $disp_artcl_icon_div in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 152


Warning: Undefined variable $disp_pdf_link in /home/api.tamileelamarchive.com/public_html/view_article_details.php on line 179

யாழ்ப்பாணம் மானிப்பாய்ப் பகுதிக்கு வெள்ளை வானில் வந்த ஆயுதக்கும்பல் ஒன்றினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கு முன்பாக உள்ள செல்லமுத்து கனகசபாபதி வீதியில் அமைந்துள்ள நாகேந்திரம் போஜன் என்பவரின் இல்லத்தில் இந்தப் பயங்கரம் நிகழ்ந்திருக்கின்றது. நள்ளிரவு தாண்டி சற்று நேரத்தில் வெள்ளை வான் ஒன்றில் சிவில் உடையில் வந்த ஒன்பது பேர் அடங்கிய குழுஒன்று வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்களை குரல்கொடுத்து எழுப்பியிருக்கின்றது. தங்களை இராணுவத்தினர் என்று தெரிவித்து வீட்டை சோதனையிடப் போவதாகக் கூறிய அக்குழுவினர் வீட்டிலிருந்த அனைவரையும் வெளியே வருமாறு அழைத்தனர். பீதியடைந்த குடும்பத்தினர் வெளியே வந்தபோது அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை, தாய், மகன், மகள்கள் இருவர், மருமகன் என ஏழு பேர் அவ்வீட்டில் இருந்தனர். ஆயுதபாணிகள் முதலில் மகள் ஒருவரையும் பின்னர் தாய் மற்றும் ஏனையோரையும் நோக்கிச் சுட்டுள்ளனர். இந்த வெறியாட்டம் முடிந்து சிறிது நேரத்தில் இனந்தெரியாத அக்குழுவினர் வானில்ஏறித் தப்பிச்சென்றுவிட்டனர். உயிரிழந்த மூத்தமகள் ரேணுகாவின் கணவரான தியாகேஸ்வரன் காயம் ஏதுமின்றி தப்பினார். சம்பவம் நடந்த வீட்டு உரிமையாளரான நாகேந்திரம் போஜன் இலங்கை காங்கேசன்துறை சாரண ஆணையாளராக நீண்ட காலம் சேவையாற்றியவர். அத்துடன் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படைப்பிரிவு வடபிராந்திய ஆணையாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.